ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதிகப்படியான ஓய்வூதியத்திற்கான விண்ணப்பங்களைச் சமர்பிப்பதற்கான கடைசி தேதியை ஜூன் 26, 2023 வரை நீட்டித்துள்ளதாக மத்திய தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.
தகுதிவாய்ந்த ஒய்வூதியதாரர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தற்போதைய காலக்கெடு முடிவடைவதற்கு ஒரு நாள் முன்னதாகவே காலக்கெடு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வந்துள்ளது.
தகுதியான நபர்கள் அனைவரும் தங்கள் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதற்கு விரிவான வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதற்காக மத்திய தொழிலாளர் அமைச்சகம் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இப்போது ஜூன் 26, 2023 வரை நீட்டித்துள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தகுதியான நபர்கள் அனைவரும் தங்கள் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதற்கு கால நீட்டிப்பு கோரி பல்வேறு தரப்பிலிருந்து பல கோரிக்கைகள் ஓய்வூதிய நிதி அமைப்புக்கு வந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தாது. 2014 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன் EPF-ல் பணம் செலுத்திய ஊழியர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். EPFO அமைப்புக்கும் சுனில் குமார்-க்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் 04.11.2022 ஆம் தேதி கொடுத்த தீர்ப்பில் உண்மையான சம்பளத்தில் (Actual Salary) வருங்கால வைப்பு நிதியில் பங்களித்த ஊழியர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனவும் இவர்கள் அதிக ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள் என்றும் அறிவித்துள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
அதிக ஓய்வூதியம் பெற தகுதி உடைய ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்கள் EPFO இன் போர்ட்டலில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தின் வடிவம் ஆன்லைனில் கிடைக்கிறது. இந்த வழக்கின் தீர்ப்பை தொடர்ந்து திகுதி உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க 4 மாதம் அவகாசம் கொடுக்கப்ட்டு கடைசி நாள் மே 3 ஆம் தேதியாக அறிவிக்கப்பட்டது. தற்போது இது ஜூன் 26 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஈபிஎப்ஓ உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எளிதாக்கும் வகையில் அவர்களுக்குப் போதுமான வாய்ப்புகளை வழங்குவதற்கும், அவர்களுக்குப் போதுமான நேரத்தையும் வழங்குவதற்கும் காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.